×

கருணை கொலை செய்யக்கோரிய குழந்தையின் சிகிச்சைக்கு மருந்துகளை வழங்க வேண்டும்: முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி உத்தரவு

திருமலை: பொருளாதார சிக்கலால் கருணை கொலை செய்யக்கோரிய குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அதிரடியாக உத்தரவிட்டார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பி.கொத்தகோட்டா பி.சி.காலனியை  சேர்ந்தவர் பாபு ஜான். இவரது மனைவி சபானா. இவரது மகள் சஹானா (1).  இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து  ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்த அபூர்வ வியாதியால் பாதிக்கப்பட்டு பிறந்த சில நாட்களிலேயே இறந்தனர். தற்போது பிறந்த குழந்தை சஹானாவும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ள அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை சரி செய்ய பல இடங்களில் கடன் வாங்கி செலவு செய்தனர்.  ஆனால், தினமும் ₹300 சம்பாதிக்கும் தன்னால் குழந்தைக்கு தினமும் ₹3 ஆயிரம் செலவு செய்து மகளுக்கு வைத்தியம் பார்க்க இயலவில்லை. எனவே மகளை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மதனபல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி, இதுபோன்ற மனுக்களை மாவட்ட நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆலோசனை தந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஜெகன்மோகன், சித்தூர் கலெக்டர் நாராயண பரத்குப்தாவுக்கு போன் செய்து உண்மை நிலையை கேட்டறிந்தார். குழந்தை சஹானாவுக்கு தினந்தோறும் வழங்க வேண்டிய இன்சுலின் மருந்து அரசு மருத்துவமனையில் இருந்து வழங்க வேண்டும். தொடர்ந்து குழந்தையின் உடல்நிலை சரியாகும் வரை மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை அறிந்து அவருக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.


Tags : Chief Minister , Kindness Killing, Child, Treatment, Drugs, Chief Minister Jaganmohan
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...